சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7 பேர் காயமடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சிவகாசி சிறுகுளம் காலணியை சேர்ந்த பழனிசாமி மகன் ஜெய்சங்கர்(57), பூத்தாயம்மாள் நகரை சேர்ந்த ரவீந்திரன் மனைவி ராஜரத்தினம்(56) ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆளையில் 80-க்கும் மேற்பட்ட அறைகளில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அறை எண்:14-ல் பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும்(புல்லிங்) பணியின் போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இதில் எம்.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி கலைச்செல்வி(33), சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள்(51), கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி(45) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த கூமாபட்டியை சேர்ந்த கோமதி(55), ராபியா பீவி(50), பாத்திமாமுத்து(65), கோபாலன்பட்டி முனியம்மாள்(50), எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி(55) உட்பட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேன்சி ரக பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.